பஞ்சாங்கம் பலித்ததா?
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்
"ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ந் தேதி (சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது” என வியந்து பல வாட்ஸ்அப் செய்திகளும் சில நாளிதழ்களில் செய்திகளும் வெளியாகி உள்ளன. .
இதை படித்த பொது ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு சாமியார் இருந்தாரம். அவர் என்ன குழந்தை பிறக்கும் என"சரியாக" கூறிவிடுவாராம். வருகின்ற பக்தர்கள் காதில் "ஆண் குழந்தை" என கூறிவிட்டு ஒரு பேப்பரில் "பெண் குழந்தை" எனவும் எழுதிக் கொடுத்தனுப்புவார்.. ஆனால் இதை இப்போது பிரிக்காதே; குழந்தை பிறந்த பின் பிரிக்கலாம் எனக் கூறி நன்றாக சீல் செய்து தருவாராம்.
ஆண் குழந்தை பிறந்து விட்டால்.. பார்த்தீர்களா.. நான் கூறியது பலித்து விட்டது என்பார். பெண் குழந்தை பிறந்துவிட்டலோ, நான் எழுதிக் கொடுத்தது பலித்து விட்டது; உங்கள் மனது சஞ்சலப் படவேண்டாம் என்று தான் ஆண் குழந்தை எனக் கூறினேன், ஆனால் எனக்கு உண்மையாக பெண் குழந்தை தான் பிறக்கும் என தெரியும் என்பாராம். அப்படி தான் இந்த பஞ்சாங்க விசயமும் இருக்கிறது.
நவம்பர் மாதத்தில் சென்னையில் சராசரியாக சுமார் 11.6 நாட்கள் மழை பொழியும். எனவே "நான்கு நாட்கள் மழை" என்று கூறினால் குருட்டாம் போக்கில் சரி போல தென்படும். இது தான் நடந்துள்ளது.
விமான சேவை எங்கே பதிக்கப்படும் என பஞ்சாங்கத்தில் இல்லை.
அயல் நாட்டில் பயங்கரப் புழுதி புயல் என்பதோடு தொடர்பு படுத்தி தான் 'விமான பாதிப்பு" என உள்ளது. கவனமாக படிக்கவும். இல்லை,இல்லை என்று நீங்கள் மறுத்தாலும் ஒரு பேச்சுக்காக "இரண்டு நாள் மழையுடன்" இதை தொடர்பு படுத்தினாலும் எங்கே "விமான பாதிப்பு" என கூறப்படவில்லை.
நவம்பர் டிசம்பர் மாதத்தில் வடஇந்தியாவில் பயங்கர பனி மூட்டம் ஏற்படும். இதன் காரணமாக பொதுவாகவே நவம்பர் டிசம்பர் மாதத்தில் விமான சேவை பாதிக்கப்படும் தான். இதை தான் இந்த பஞ்சாங்கம் குறிக்கிறதா? இல்லை "பாதிப்பு" என்றால் விமானம் காணாமல் போவது, வானில் விபதுக்குள்ளாவது என்பதை சுட்டுகிறதா? தெளிவே இல்லை, எதை வேண்டுமானாலும் நாம் மனதுக்கு தோன்றியபடி பொருத்திக் கொள்ளலாம்.
பலரும் அந்த பஞ்சாங்க பக்கத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டே இரண்டு கணிப்புகள் சரியாக நடந்தது போல மயக்கம் தருவது கொண்டு "பஞ்சாங்கம் பலித்து விட்டது பார்" என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் சற்ற கூர்ந்து கவனித்தால் அதில் உள்ள பல கணிப்புகள் அப்பட்டமாக பொய்யாகி உள்ளது வெளிப்படும்.
கீழே உள்ள அட்டவணையை பாருங்கள்:-
இதுவரை ( டிசம்பர் 5 வரை) பஞ்சாங்கம் முன்கணித்ததில் இரண்டு கணிப்புகள் ஓரளவு சரி என்று ஒப்புக் கொண்டாலும் ஏழு கணிப்புகள் மிக மிக தவறு.
குருட்டாம் போக்கில் ஏதோ ஒன்று சரியாக அமைந்து விடுவதை தான் இது காட்டுகிறதே தவிர பஞ்சாங்க கணிப்பு மிக துல்லியமாக இருக்கிறது என்பதை அல்ல.
மேலும் பஞ்சாங்கம் குறித்து அதீத பிரமைகளை சிலர் தோற்றுவிக்கின்றனர். இன்று தமிழக பகுதிகளில் முக்கியமாக மூன்று வகையான பஞ்சாங்கங்கள் பயன்பாட்டில் உள்ளன.
முதலாவது வாக்கிய பாஞ்சங்கம்.
"பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களை கொண்டு கணிக்கபடுவது வாக்கிய பாஞ்சங்கம்" என்று பலரும் உண்மையான அறிவியல் வரலாறு தெரியாமல் கூறிவருகின்றனர்.
உள்ளபடியே 1184 AD கால கட்டத்தை சார்ந்த வரருசி என்பர் உருவாக்கிய வடமொழியில் எழுதப்பட்ட "வாகியகரணம்" எனும் நூல் தான் அடிப்படை துவக்கம். இதே காலகட்டத்தில் ஆரியபட்டரின் "ஆரியபட்டியம்" சித்தாந்தத்தை ஒட்டி ஹரிதத்தர் அவர்களால் பஞ்ச போத கரணங்கள் என்னும் பரஹித வாக்கிய முறையும் ஏற்படுத்தப்பட்டாலும் இன்று அது அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. இதை சித்தாந்த பஞ்சாங்கம் என்பர்.
பஞ்சாங்கம் என்பது குறி சொல்லும் புத்தகம் என்று இன்று பலராலும் பார்க்கப்படுகிறது. வரலாற்றில் நவீன காலண்டர் வருவதற்கு முன்பு இருந்த நாட்காட்டி அவ்வளவே.
பஞ்ச + அங்கம் அதாவது ஐந்து உறுப்புக்களை கொண்டுள்ளது பஞ்சாங்கம். வாரம், திதி (நிலவின் பிறை), நக்ஷதிரம் (வானில் நிலவின் நிலை), கர்ணம் (திதியின் இரண்டு பகுதி), யோகம் (நிலவு மற்றும் சூரிய கோணத்தின் கூட்டு) ஆகிய ஐந்து வானியல் நிலையை சுட்டி அதன் மூலம் கால வரிசை படுத்துவது தான் பஞ்சாங்கத்தின் வேலையாக இருந்தது.
பல்லி விழ்ந்த பலன் முதலிய குறி சொல்லும் புனைவுகள் பின்னர் இடைசொருகல் செய்யப்பட்ட வேலை தான். பஞ்சாங்க கணிதம் என்பது உள்ளபடியே, இன்று என்ன திதி இருக்கும், என்ன நக்ஷத்திரம் இருக்கும் என்பது போல, பஞ்ச + அங்கம் தீர்மானம் செய்வது ஆகும். இவற்றை கணிக்கும் வாய்பாடு தான் "வாக்கியங்கள்".
K V ஷர்மா மற்றும் T.S.குப்பண்ண சாஸ்திரி ஆகியோர் இன்று பரவலாக பயன்படுத்தப்படும் வாக்கியங்கள் கி.பி.13 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு.சுந்தர்ராஜா என்பவர் "வாக்கியகரணம்" என்னும் வாக்கிய கணித முறையை ஒட்டி உள்ளது என ஆய்ந்து கண்டுள்ளனர். இதை தழுவி தான் தமிழில் உள்ள உள்ளமுடையான் வாக்கியம் எனும் நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலை தான் தமிழ் வாக்கிய சூத்திரங்களை பயன்படுத்தி பஞ்சாங்கம் தயாரிப்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
நிலவின் இயக்கம் வட்ட இயக்கம்:
சுமார் 29.5நாளில் முழு நிலவு நிலையிலிருந்து மறுபடி முழு நிலவு நிலைக்கு வந்துவிடுகிறது. இதை தவிர நிலவுக்கு பல இயக்கங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் தொகுத்து சராசரியாக சுமார் 248 நாட்களுக்கு ஒரு முறை சுற்றிவரும் படியாக கணிக்கப்பட்ட நூல் தான் வாக்கிய பஞ்சாங்கம்.
இதில் சந்திரவாக்கியம் என 248 வாக்கியங்கள் இருக்கும். ஒவ்வொரு வாக்கியமும் நிலவின் இயக்கங்கள் ஆகும் .
இவ்வாறே குஜாதி ஐவர்கள் (செவ்வாய், புதன். குரு. சுக்ரன், சனி) மற்றும் சூரியன் முதலிய வான் பொருள்களுக்கும் 2075 வாக்கியம் இருக்கும். எண்களை நினைவில் வைத்துக் கொள்வது கடினம் என்ற நிலையில் பாடல்களாக அவற்றை வடித்தெடுத்தனர். இதுவே வாக்கியக் கணிதமாகும். தொலைநோக்கி இல்லைதா அக்காலத்தில் எளிதில் வான் பொருள்களின் நிலையை கணிக்க ஏற்படுத்தப்பட்ட முறைதான் இது.
சற்றே கவனமாக படித்தால் இந்த வாக்கிய முறை என்பதில் எந்தவித மாய மந்திரமும் இல்லை என்பது புலனாகும்.
கணித வாய்பாடு போன்ற ஒரு முறையே இது. எடுத்துக்காட்டாக “விண்ணோர்நாதன்” எனும் வாக்கியம் 12 டிகிரி 3 நிமிட கோணத்தை குறிக்கும். வானில் குறிப்பிட்ட துவக்க புள்ளியிலிருந்து அன்று நிலவு 12 டிகிரி 3 நிமிட கோண தொலைவில் இருக்கும் எனபது பொருள்.
காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் பல பிழைகள் எழுந்தன. நவீன அறிவியல் படி நட்சத்திர ஆண்டு சுமார் 365.25636 நாட்கள் ஆகும். அனால் ஆரியபட்டரின் சித்தாந்தத்தின் படி இது 365. 258681, சூரிய சித்தாந்தத்தின் படி இது 365.258756 நாட்கள். எனவே பழைய முறையில் பிழை ஏற்படுவது இயல்பு.
அதேபோல 248 நாட்களுக்கு ஒருமுறை அல்ல உள்ளபடியே 247.99095 நாட்களுக்கு ஒரு முறை நிலவின் இயக்கம் அதே நிலைக்கு திரும்புகிறது.
ஆயினும் இடைக்காலத்தில் ஏற்பட்ட சமூக இறுக்கம் வாக்கிய கரணம் போன்ற நூல்களை "கடவுள் அருளி செய்தது" என கண்டது. எனவே கடவுளின் வாக்காக வாக்கியங்கள் கருதப்பட்டு பிழை திருத்தப்படவில்லை.
ஆயிரம் வருடம் முன்பு ஏற்படுத்தப்பட்ட இந்த சூத்திரங்கள் பலநூறு ஆண்டுகளாக உண்மை கிரக நிலையுடன் ஒப்பிட்டு திருத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதால் இந்த வாக்கிய முறையில் கணிக்கப்படும் பஞ்சாங்க தகவல்கள் உண்மையான கிரக நிலையிலிருந்து வேறுபட்டு அமையும் அல்லவா. இது போன்ற பல்வேறு பிசகுகள் ஆயிரம் ஆண்டுகளாக சேர்ந்து இன்று வாக்கிய பஞ்சாங்க கணிப்புகள் உள்ளபடியே வான் பொருள்களின் நிலைக்கு பொருந்தி வருவதில்லை என்பது தான் மெய்.
எடுத்துக்காட்டாக இன்று ஜனவரி 14 அன்று உத்தராயணம் என பிழையாக கொண்டாடி வருகிறோம். ஆனால் உள்ளபடியே டிசம்பர் 21/22 அன்று உத்தராயணம் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு பற்பல பிழைகள் வானவியல் அறிந்தவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி.
இவ்வாறு வாக்கிய பஞ்சாங்கத்தில் பிசகு ஏற்படுவதை கண்ட ரகுநாதசாரி மற்றும் சுந்தரேச சௌரடிகள் என்பார்கள் சேர்ந்து 1864வாக்கில் பஞ்சாங்கத்தை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர்.
ரகுநாதச்சாரி அன்றைய வானவியல் கூடத்தில் பணியாற்றிய ராயல் வானவியல் கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப் பட்ட விஞ்ஞானி ஆவார். இவரின் முன்முயற்சியால் திருத்திய திருகணித முறையை ஒட்டி செய்யப்படும் பஞ்சாங்கங்கள் "திருகணித பஞ்சாங்கம்" எனப்படும். இவை பெரும்பாலும் நவீன வானியல் முறையில் கணிக்கப்படுவது ஆகும்.
பிழைகள் காரணமாகவும் உண்மையான வானசாஸ்திர தகவல்களுக்கு மாறுபட்டும் இருப்பதால் வாக்கிய மற்றும் சூரிய சித்தாந்த பஞ்சாங்கங்களை இன்று பெரும்பாலான மக்கள் புறக்கணித்துவிட்டனர்.
வாக்கிய பஞ்சாங்கத்திலும் கிரகணம் போன்ற நிகழ்வுகள் நவீன வானவியல் கணிப்பதை கொண்டு தான் பிரசுரம் செய்கின்றனர். எனவே தான் காஞ்சி மடத்தில் ஆரம்பத்தில் வாக்கிய கணிதம் பின் பற்றப்பட்டு வந்தாலும் தற்போது திருக்கணித முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கிரஹண முரண்பாட்டிற்கு பின்னர் திருப்பதி தேவஸ்தானம் முதலிய வழிபாட்டு ஸ்தலங்கள் வாக்கிய முறைகளை கைவிட்டு திருக்கணித முறைக்கு மாற்றிக்கொண்டுள்ளனர்.
கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடும் என என நம்பும் பழமைவாதிகள் மட்டுமே "வாக்கிய பஞ்சாங்கத்தை" தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர்.
நவீன அறிவியல் என்பது எதோ வானத்திலிருந்து தீடிர் என்று குதித்துவிட வில்லை. முன்னோர்கள் தோளில் நின்று மேலும் தொலைவையும் கூடுதல் ஆழமாகவும் இயற்கையை அறிவது தான் நவீன அறிவியல்.
இன்றைய நவீன அறிவியல் நமது முன்னோர்களான அரிஸ்டாட்டில், ஆரியபட்டர், இபின் அல் ஹைதம் போன்றோரின் தோளில் நின்று தான் வளர்ந்துள்ளது. எனவே நேற்றை விட இன்று நமது அறிவு செறிவானது; இன்றைவிட நாளை மேலும் மெச்சப்படும்.
பீதியை கிளப்பும் புரளிகளை பேசி, அடிப்படை இன்றி வாக்கிய பஞ்சாங்கத்தை புகழ்ந்து போலி பெருமைகளை பேசி நவீன அறிவியலை விட அன்றே எல்லாம் தெரியும் என்பது போன்ற வாதங்கள் உள்ளபடியே இந்திய அறிவியல் வரலாற்றுக்கும் முந்தைய அறிஞர்களுக்கும் செய்யும் துரோகம் ஆகும். பண்டைய இந்திய அறிவியல் முயற்சிகளை கேலிக்கூத்து செய்யும் செயலே தவிர வேறொன்றும் இல்லை.
த வி வெங்கடேஸ்வரன்