வானம் மூடிய காரிருள் மெல்ல அதிர்ந்தது - ஒரு
காலடி ஓசையென் காதில் வந்து விழுந்தது
யாரிவர் யாரிவர் - என் நேரினில் பார்வைத்
தேரினில் யாரிவர்! இவ்விருள் வேளையில் யாரிவர்!
கோடி எரிமலை ஆடும் அலைகடல்
ஈடு இணையில்லா எங்கள் பகத் சிங் - ஓ! ஓ!
எங்கள் பகத் சிங்
தேச விடுதலை வேள்வித் தீயினில்
ஆவி தூவிய ஆண்மை யாளனே
எங்கள் பகத் சிங் ஓ! ஓ! எங்கள் பகத் சிங்!
தூக்குக் கயற்றினில் தொங்கி இளமையில்
தீரம் காட்டிய தியாக தீபமே!
எங்கள் பகத் சிங் ஓ! ஓ! எங்கள் பகத் சிங்!
இறந்தாய் எம்தாய் விடுதலைக்காய்! எப்படி
பிறந்தாய் என் முன் மீண்டும் புதிதாய்?
இருக்கின்றேன் நான் இறக்கவில்லை
பாரத தேவியின் பாதச் சிலம்பில்
பாடும் பரல்களில் ஒருபர லாக
அன்னை அவள் கரம் இருக்கும் வீணையின்
ஆயிரம் நரம்பில் ஒருநரம்பாக
இருக்கின்றேன் நான் இறக்கவில்லை
தாய்த் திருநாடு தழைத்தினி தோங்கிடப்
பாடுபடுந் தோழர் தோள் மலை யோரம்
தீமையை வீழ்த்தச் சீறிடும் வீரரின்
கண்களில் பொங்கும் கனல் நதி தீரம்
இருக்கின்றேன் நான் இறக்கவில்லை
உழைப்பின் மூலம் நாட்டை உயர்த்திடும்
உத்தமத் தொண்டர் உடம்பின் வேர்வையில்
ஆலையில் வயலில் வாடும் மானுடன்
மீட்சிக் கியற்றும் மேன்மைச் செயலில்
இருக்கின்றேன் நான் இறக்கவில்லை
கனவுக் கொடியில் கொய்த தல்ல சுதந்திரம்! - பலர்
தியாகம் செய்து பறித்து வந்த மலரிது!
ஒரு தான மாக கிடைத்ததல்ல சுதந்திரம்
உயர் மானம் கொண்டோர் மரணம் தந்த பரிசிது - இதைக்
காக்க நிமிரும் நெஞ்சின் உள்ளே நிரந்தரம்
இருக்கின்றேன் நான் இறக்கவில்லை
ராஜ இடியின் புதல்வர் என்றன் வாலிபர் - அவர்
விழிக்கும் விழியில் நடுங்கும் வானச் சூரியன் - சிறு
உழுந்தின் அளவு கடுகின் அளவு பிறர்வசம் - நாட்டை
இழந்து வாழ மறுத்துப் பொங்கும் இவர்களின் - நல்ல
நியாயம் மிக்க கோபம் தன்னை வாழ்த்தியே ,
இருக்கின்றேன் நான் இறக்கவில்லை
தோழர் எம். பி. சீனிவாசன் - அவரின் இசைக்கு ஏற்ப அவர் விரும்பிய சொற்களை பாடல் வரிகளாக அமைத்து தந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன்
No comments:
Post a Comment